Saturday, November 12, 2016

தமிழக எல்லைப் போராட்டத்தில் திமுகவுக்கு பங்கில்லையா?

யுவ கிருஷ்ணா
Via Facebook
2016-Nov-12

திடீர் டம்ப்ளர்களுக்கும், ஜெயமோகன்களுக்கும், தாம்ப்ராஸ்களுக்கும் திடீர் திடீரென தமிழுணர்வு பொத்துக்கொண்டு பீறிடுவது ஏனென்று தெரியவில்லை!

தமிழக எல்லைப் போராட்டத்தில் திமுகவுக்கு பங்கில்லை என்று வரலாறு பேசுகிறார்கள். நாலும் தெரிந்த ஊடகவியலாளர்கள் சிலரும் இவர்களுக்கு ஒத்து ஊதும் விதமாக செயல்படுகிறார்கள்.

முன்பெல்லாம் திமுக பெருசுகள் பழங்கதை பேசும்போது சலிப்பாக இருக்கும். ஆனால், பழங்கதையை திரும்பத் திரும்ப அவர்கள் ஏன் பேசினார்கள் என்பதன் அவசியத்தை இப்போதுதான் உணரமுடிகிறது. ஏனெனில் இந்த திரிபுவாதிகள் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் அத்தனையையுமே திரிக்கும் வஸ்தாதுகள்.

இவர்களை எதிர்கொள்ள வரலாற்றை திரும்பத் திரும்ப கேட்பவர்கள் சலிக்கும் வரையில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தாருக்கு விதிக்கப்பட்டிருக்கும் சாபக்கேடு.

1953ல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் மூன்று அம்சங்களுக்காக.

1. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வியறிவு கிடைத்துவிடுமோ என்கிற பதட்டத்தில் ராஜாஜி அறிவித்த குலக்கல்வித் திட்டம்.

2. டால்மியாபுரம் என்று ஒரு ஊரையே டால்மியாவுக்கு பட்டா எழுதிக் கொடுக்கும் முகமாக கல்லக்குடியை பெயர் மாற்றம் செய்ய நினைத்த மத்திய அரசுக்கு எதிராக.

3. மொழிவாரிப் பிரிவினை பேச்சுவார்த்தைகளின் போது தமிழர்கள் பெருமளவில் வசித்த சித்தூர் மாவட்டத்தை ஆந்திராவோடு சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, மபொசியோடு இணைந்து நடத்திய போராட்டங்களை இந்தியப் பிரதமர் நேரு, ‘சைல்டிஷ் நான்சென்ஸ்’ என்று ஒரு வரி ஆங்கிலத்தில் கீழ்மைப்படுத்தியதற்காக.

’மும்முனைப் போராட்டம்’தான் திமுக என்கிற இயக்கத்தையே தமிழர்கள் மத்தியில் கொண்டுச் சென்று சேர்த்தது என்பது வரலாறு. அந்த மூன்று பிரச்சினைகளில் முக்கியப் பிரச்சினையாக நேருவின் ‘நான்சென்ஸ்’ அமைந்தது.

ஒருவேளை நேரு, நான்சென்ஸ் என்று சீறியிருக்கா விட்டால்.. மும்முனைப் போராட்டம் நடந்திருக்காவிட்டால் இன்று எல்லைப் போராட்டத்தில் திமுகவின் பங்கினை இவர்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்துவிட முடியும். நமக்கும் எடுத்துப் பேசுவதற்கு ஆதாரமே இல்லாமல் போயிருக்கும்.

1953, ஜூலை 13, 14 தேதிகள் மும்முனைப் போராட்டத்துக்காக குறிக்கப்பட்டன. போராட்டத்துக்கு முன்பே அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், என்.வி.நடராசன் என்று ஐம்பெரும் தலைவர்களும் ராஜாஜி அரசால் கைது செய்யப்பட்டார்கள்.

“நான்கு தம்பிமார்களோடு நான் சிறை சென்றுவிட்டேன். போராட்டத்தை ஆயிரக்கணக்கான தம்பிமார்கள் நடத்துவார்கள்” என்று பேரறிஞர் அறிவித்தார்.

ஜூலை 14-ஆம் தேதி ராஜாஜி வீட்டுக்கு முன்பாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்தியவாணி முத்து தலைமையில் பலநூறு தம்பிமார்கள் வெற்றிகரமாக மறியல் செய்து அண்ணாவின் ஆணையை நிறைவேற்றினார்கள்.

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதே திராவிட இயக்கம்தான். வேறெவரையும் விட தமிழ், தமிழருக்காக போராடி தியாகங்களை செய்த இயக்கங்கள் திராவிட இயக்கங்களே.

ஒரு காலத்தில் இவர்கள் தமிழர் சார்பானவர் என்பதாலேயே இனவாதிகளாகவும், மொழிவாதிகளாகவும் குற்றம் சாட்டப்படுவார்கள். மற்றொரு காலத்தில் தமிழுக்கும்/தமிழருக்கும் எதையுமே திராவிட இயக்கத்தார் செய்யவில்லை என்று முதலைக்கண்ணீர் வடிப்பார்கள். ஒரே இயக்கத்தின் மீது இருவேறு நேரெதிர் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது உலகிலேயே திராவிட இயக்கத்தவர் மீதுதான். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று இவர்களது ஆட்சியைதான் கலைப்பார்கள். விடுதலைப்புலிகளுக்கு துரோகம் என்றும் இவர்களைதான் தூற்றுவார்கள்.

தேவபாடை மதவெறியர்களுக்கு கற்றுத் தந்திருக்கும் வரலாற்று தந்திரம் இதுதான். இந்த மனுதர்ம சதிகளுக்கு பலியாகாமல் தப்பிக்க வேண்டியது அவரவர் சாமர்த்தியம்.

No comments:

Post a Comment