Venugoplan Rengan
Via Facebook
2016-Nov-16
ஒரு அக்கவுண்டண்டாக பல நிறுவனங்களில் குப்பை கொட்டியவன் என்ற முறையில், லஞ்சம் - கறுப்புப்பணம் – ஹவாலா – கள்ள நோட்டு இவற்றுக்கிடையில் இருக்கிற அபாயகரமான தொடர்பை ஒரு சிறு உதாரணத்துடன் சொல்ல ஆசை:
ஒரு நிறுவனத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக, யாரோ ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கறுப்புப்பணமே இல்லாத சுத்த சன்மார்க்க’ கம்பனியாக இருந்தாலும், அதற்குத் தேவையான ரொக்கத்தை வங்கியிலிருந்து எடுக்க வேண்டும்; அல்லது முதலாளியின் சொந்தப் பணத்திலிருந்து கொடுக்க வேண்டும். சரி, லஞ்சம் கொடுத்தாகி விட்டது. அதற்கு, என்ன கணக்கு எழுதுவது? இப்போது ஹவாலா கைகொடுக்கிறது. ஒரு போன் போட்டால் போதும்; வந்து நிற்பார். (ஜி.எஸ்.டி.வந்தால் இதற்கும் ஆப்பு காத்திருக்கிறது.)
வாங்காத ஒரு பொருளை வாங்கியதுபோல, ஒரு போலியான பில் கிடைக்கும். அதற்கு ஹவாலா ஆசாமிக்கு ஒரு செக் கொடுத்துவிட்டால், அவர் தனக்கு வேண்டிய கமிஷனை எடுத்துக் கொண்டு, மீதிப்பணத்தை ரொக்கமாகக் கொடுத்துவிடுவார். நல்ல பிள்ளைபோல, எடுத்த பணத்தை மீண்டும் வங்கியிலேயே போட்டுவிட்டு லஞ்சக்கணக்கைச் சரிசெய்தாகி விட்டது.
ஹவாலாக்காரர்கள் (பெரும்பாலும்) புழங்க விடுகிற பணம் எங்கிருந்து வருகிறது? பெரும்பாலும் கள்ளநோட்டுப் பரிவர்த்தனை, சட்டவிரோதமான தொழில்கள் அல்லது வருமானவரிக் கணக்கில் காட்டாத பணம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் சட்டவிரோதமான பணவரவில், கள்ளக்கடத்தல் தொடங்கி, தீவிரவாதிகளுக்காக மறைமுகமாக அனுப்பப்படுகிற பணம் வரை அடங்குகிறது.
மேற்கூறிய உதாரணம், நடந்த ஒரு செலவுக்குக் கணக்கு எழுதுவதற்காக நிகழும் சங்கிலித்தொடர் சட்டவிரோதச்செயல்களுக்கு ஒரு உதாரணம். இது தவிர, மெனக்கெட்டு வருமானவரியைத் தவிர்ப்பதற்கும், பங்குதாரர்களை ஏமாற்றுவதற்கும், தொழிலாளர்களுக்கு போனஸ் இன்னபிற சலுகைகளை வழங்காமலிருப்பதற்கும், லாபத்தில் ஓடுகிற நிறுவனங்களை நஷ்டம் என்று பொய்க்கணக்குக் காட்டுகிற புண்ணியவான்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த ஹவாலா மகாத்மாக்களுக்கும் இடையே நிரந்தரமான பந்தம் இருக்கும். எவ்வளவு கறுப்புப்பணம் ஈட்ட வேண்டுமோ அவ்வளவு பொய்க்கணக்கு எழுதி ஊழியர்கள் தொடங்கி அரசாங்கம் வரை அத்தனை பேரையும் ஏமாற்றலாம்.
நிர்ப்பந்தம் காரணமாக வேண்டாவெறுப்பாக இந்தக் கறுப்புப்பணத்துடன் புழங்குகிறவர்கள் தொடங்கி, திட்டமிட்டு கறுப்புப்பணத்தை உற்பத்தி செய்வதே குறியாய் இருக்கிறவர்கள்வரைக்கும், அனைவரும் கரையான்போல பொருளாதாரத்தை அரித்துக்கொண்டிருக்கிறார்கள். மறைமுகமாக தீவிரவாதிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், கள்ளநோட்டு அடிக்கிறவர்களுக்கும் உபகாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒரு வர்க்கம் கண்டுகொள்ளாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் சாவுமணி அடிக்க மன்மோகன்சிங், சிதம்பரம் ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் முதலடி எடுத்து வைத்துவிட்டு, பின்வாங்கினார்கள். இந்த அரசு ‘சிலர் விமர்சனம் செய்தால் செய்துவிட்டுப் போகட்டும்; இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்’ என்று ஒரு கட்டத்தில் துணிச்சலாக ஒரு முடிவு எடுத்திருக்கிறது.
500, 1000 ரூபாய் நோட்டுக்களை இனி ஹவாலாக்காரர்கள் கையாள முடியாது. ஆனால், அவர்களிடமும் 100,50 ரூபாய் நோட்டுக்கள் இருக்கும். ஆகவே, இந்த ஒற்றை நடவடிக்கையால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வந்துவிட்டதாக யாரும் நம்பத்தேவையில்லை. இதைத் தொடர்ந்து மேலும் சில நடவடிக்கைகள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தங்கம் (சிதம்பரம் முயன்று, பயந்து பின்வாங்கியது ஞாபகமிருக்கிறதா?).
பா.ஜ.க.அரசு எடுத்து வைத்திருப்பது முதல் அடி மட்டுமே! இதைத் தொடர்ந்து மேலும் சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், புதிய 500,2000 ரூபாய் நோட்டுக்கள் வந்ததும் மீண்டும் சகலமும் மெல்ல மெல்ல ஆரம்பித்துவிடும்.
இங்கே உற்பத்தி செய்யப்படுகிற கறுப்புப்பணம்தான், பெரும்பாலும் ஹவாலா மூலமாக வெளிநாட்டு வங்கிகளுக்குச் சென்று சேர்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், இந்த நடவடிக்கை எவ்வளவு முக்கியமானது என்பது புரியும்.
பழைய உதாரணம்தான். உடம்பில் புற்றுநோய் வந்தால், அந்தக் கட்டியை அகற்றும்போது, உடலின் ஏனைய பாகங்களும் சில நாட்கள் செயலற்றுப் படுக்கையில் ஓய்ந்திருப்பதைப்போல, இந்த அதிரடி நடவடிக்கையால் சாமான்யர்களுக்கு தவிர்க்க முடியாத சில அசௌகரியங்களும், ஏன், துன்பங்களுமேகூட நேரலாம். ஆனால், முந்தைய அரசாங்கள் ‘எல்லாரும் கத்துவாங்களே, என்ன பதில் சொல்றது?’ என்று தயங்கியதைப் போல இல்லாமல், ‘ நடப்பது நடக்கட்டும்’ என்று காரியத்தில் இறங்கியிருப்பது பெரிய விஷயம்.
No comments:
Post a Comment