Tuesday, November 15, 2016

உங்களை எவர் எரிக்கப் போகிறார்கள்? - கருப்புப் பண நாடகம் குறித்து

உங்களை எவர் எரிக்கப் போகிறார்கள்?
இந்தச் சமூகம்தான் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக்கொண்டதே!
- கருப்புப் பண நாடகம் குறித்து

ம.செந்தமிழன்
======================================
’எல்லாப் பரிமாற்றங்களையும் வங்கிகள் வழியாக மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு என்னதான் சிக்கல்?’ என இந்திய அரசின் பொருளாதாரச் சாத்தான்கள் கேள்வி எழுப்புகின்றன. ‘எல்லா வங்கிகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறீர்களே... எங்கள் பணத்தை எல்லாம் வங்கியில் போட்டுவிட்டு எவரிடம் கேட்பது?’ என்பது நாம் கேட்க வேண்டிய எதிர்க் கேள்வி.

இந்திய அரசின் வங்கிகளில் வெறும் 33% அரசின் பங்குகள் இருந்தால் போதும் என்பதுதான் இப்போதுள்ள கொள்கை. இந்தக் ’கொள்கையை’ அவர்கள் மிக நிதானமாகவும் அழுத்தமாகவும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

பெரும்பாலான பங்குகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அந்த வங்கியில் பணத்தைச் செலுத்தும் மக்களின் நிலைமையை நினைத்தால் அச்சமாக உள்ளது.

இப்போதுள்ள தனியார் வங்கிகளின் கடன் கொள்கைகள் மிகக் குரூரமானவையாக உள்ளன. வீட்டுக் கடன், வாகனக் கடன், வேளாண் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட அடிப்படையான பொருளாதாரத் தேவைகளுக்கு இவ்வங்கிகள் விதிக்கும் உண்மையான வட்டி விகிதம் குறைந்தபட்சம் 40%. இதற்குக் கூட்டு வட்டி அல்லது மறைமுக வட்டி எனப் பெயர். புறத் தோற்றத்தில் 12% வட்டி விகிதம் காட்டப்படும். தவணை செலுத்தா காலங்களுக்கான அபராதம், வட்டி மீது விதிக்கப்படு வட்டி ஆகியவை கடன் தொகையை மிக அதிகமாக உயர்த்திவிடுபவை.

வீடு, வாகனம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் காலத்திற்கேற்ப அதிகரித்து விடுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் 15% என்றால் ஏதேனும் ஒரு சூழலில் அதை, 20% என்று மாற்றும் உரிமை வங்கிகளுக்கு உண்டு.

பணமதிப்புக் குறைவு, பொருளாதார மந்தம் ஆகிய சூழல்களில் இவ்வாறு வட்டி விகிதத்தை உயர்த்துவது வங்கிகளின் நடைமுறை. தனியார் வங்கிகளில் வேளாண் கடன் வாங்கிவிட்டு, நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்வோரை மனக் கண்ணில் கொண்டு வாருங்கள். டிராக்டர் வாங்கிய கடனில் தவணைத் தொகையைத் தராத விவசாயி அவரது சொந்த ஊரில் சொந்த நிலத்தில் உள்ளூர் காவல்துறையினரால் அடித்து அவமானப்படுத்தப்பட்டதை மறந்துவிடாதீர்கள். அரசு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் மராட்டியத்தில் தற்கொலை செய்துகொண்டனர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இருக்கும் பணத்தை எல்லாம் வங்கிகளில் செலுத்திவிட்டு நிம்மதியாக உறங்கலாம் என எவரேனும் நினைத்தால், அவர்கள் என் சொற்களை வீசி எறியலாம். எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையினாலும் சக மனிதர்கள் மீதுள்ள அன்பினாலும் என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

பெருநிறுவனங்களை நடத்துவோருக்குப் பணம் தேவையில்லை. வெறும் இணையப் பரிமாற்றத்தில் அவர்களால் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அவர்கள் கொள்ளையடிக்கும் நம் செல்வங்களைப் பணமாக வைத்திருப்பதில்லை. அந்தக் காலம் கரையேறி விட்டது. உங்களுக்கும் எனக்கும் பணம் வேண்டும்.

’எல்லாப் பரிமாற்றங்களையும் வங்கிகள் வழியாக நடத்தினால் கருப்புப் பணம் ஒழியும்’ என்று கூறுவது  நமது எதிர்காலத்தைச் சூறையாடும் சதி. ’எல்லா வங்கிகளும் தனியார்மயம்; எல்லோருடைய பணமும் வங்கிகள் வசம்’ என்ற சிந்தனை ஈமு கோழி கொள்ளையைவிட ஆபத்தானது.

கிரீஸ் நாட்டுப் பொருளாதாரம் பிச்சைப் பொருளாதாரமாக மாறியது, தனியார்மயத்தின் விளைவு. தாய்லாந்தும் இந்தோனேசியாவும் அயல்நாட்டுப் பயணிகளின் உல்லாச விடுதிகளாக மாறியது தனியார்மயத்தின் விளைவு. அமெரிக்காவின் கடன் சுமை தாங்கவியலாத நிலையை எட்டியுள்ளது தனியார்மயத்தின் விளைவு.

மருத்துவம் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் நோயாளிகள் அதிகரித்தனர். வேளாண்மையில் பெறுநிறுவனங்கள் வந்த பின்னர் உணவு நஞ்சானது, வேளாண்மை கடன் சுமக்கும் தொழிலானது. கல்வியில் தனியார்மயம் திணிக்கப்பட்ட பின்னர், கடனாளிகள் அதிகரித்தனர். வங்கிகள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், சொந்த நிலங்களை விற்றுவிட்டு நகரங்களுக்குக் குடியேறும் மக்கள் அதிகரித்தனர். காப்பீட்டு நிறுவனங்களில் தனியார் நிறுவனங்கள் நுழைந்த பின்னர், இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றங்களை நாடுவோர் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது.

இப்போது இந்தியாவின் இராணுவத்திலேயே தனியார் பெறுநிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் யாவும் அதிவேகமாகத் தனியாருக்கு வாரி வழங்கப்படுகின்றன.

’எல்லோருக்கும் வங்கிக் கணக்கு’ என்னும் வாசகம் எல்லோருடைய சிறு சேமிப்புகளையும் வங்கிகளின் வயிற்றுக்குள் புதைக்கும் நோக்கம் கொண்டது. இந்த நிலைமையை அனுமதித்தால், நம் வீடுகளில் ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதும் சட்ட விரோதம் எனும் நிலைமை உருவாகும்.

நகை வாங்குவதற்கும் இனிமேல் வரிக் கணக்கு அட்டை (Pan) வேண்டும் என்று இப்போது அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து நடைமுறைக்கு வந்தால், நீங்கள் வாங்கும் நகைகளுக்கு வரி செலுத்துவதோடு நில்லாமல், குறிப்பிட்ட அளவுக்கு மேல் நகையை வீட்டில் வைக்க முடியாத நிலைமையும் உருவாகும். ஏற்கெனவே, இதற்கான அறிகுறியை இந்திய அரசு வெளிப்படுத்திவிட்டது. ‘வீட்டில் உள்ள தங்க நகைகளை அரசிடம் கொடுத்து வையுங்கள். தேவைப்படும்போது வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூவத் துவங்கிவிட்டார்கள்.

பணம் இல்லாப் பொருளாதாரத்தின் மையக் கருத்து என்னவெனில், ‘ஒவ்வொரு மனிதரின் அன்றாட வாழ்க்கையும் நிறுவனங்களைச் சார்ந்து மட்டும்தான் அமையும்’ என்பதாகும்.

பொதுத்துறை வங்கிகளிலேயே பல்லாயிரம் ஊழல்கள் நடக்கின்றன. நமது பொருளாதாரத்தை எல்லாம் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கிவிட்டு ‘வாராக் கடன்’ எனும் பட்டியலில் சேர்த்துவிடுகின்றன அவ்வங்கிகள். அவர்கள் வாரிக் கொடுக்கும் பணம் நமது வியர்வையின் விளைச்சல் என்பதையும், ‘வாராக் கடன்’ என்ற பேரில் அயல்நாட்டு வங்கிகளில் பண்ணைகளில் விடுதிகளில் புழங்கும் ஒவ்வொரு ரூபாயும் நம் உதிரத்தின் விளைவுகள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இதோ இந்த ‘அதிர்ச்சித் தாக்குதலில்’ வங்கிகளில் கருப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படவே இல்லையா? 20 முதல் 40%வரை பங்கு பெற்றுக்கொண்டு கருப்பை வெள்ளையாக மாற்றும் அதிகாரிகள் இல்லையா, அமைச்சர்கள் இல்லையா?

திரைப்படம், அரசியல் ஆகிய இருதுறைகள்தான் கருப்புப் பணத்தின் தாயும் தந்தையும். இவ்விரு துறைகளில் உள்ளவர்கள் எல்லோரும் ‘கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு இதுதான் சரியான நடவடிக்கை’ என்கிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் எல்லோரும் வங்கிகள் வழியாக மட்டுமே வாழ்கிறார்களா?

’ஒரு நாளைக்கு நான்காயிரம் ரூபாய் மட்டும்தான் தருவோம்’ என்று அரசாங்கம் அறிவிக்கிறது. பேட்டி கொடுக்கும் உத்தமர்கள் தங்கள் வீட்டு நாய்களுக்கும் பூனைகளுக்கும் இதைவிட அதிகமாகச் செலவு செய்வார்கள். திருமணத்தை அறிவித்துவிட்டு தாலி வாங்கப் பணம் இல்லை எனக் கதறும் மக்களது குரல் இங்கே அலட்சியப்படுத்தப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கருப்புப் பணத்தால் அலங்கரிப்போரது தேசபக்தி முழக்கங்கள் அளவுக்கதிகமாக விளம்பரம் செய்யப்படுகின்றன.

ஒரே ஒரு அறிவிப்பு நம் பணத்தை முடக்கிப் போடும் என்றால், இன்னும் வரப்போகும் பல அறிவிப்புகள் நம் எதிர்காலத்தை முடக்கும் என்பதை உணருங்கள்.
இங்கே வருமான வரித்துறை இருக்கிறது.

பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு இருக்கிறது. பல்வேறு உளவுப் பிரிவுகள் இருக்கின்றன. இந்தத் துறைகள் எல்லாம் களத்தில் இறங்கி நேர்மையாகச் செயலாற்றினால், நாட்டில் உள்ள எல்லாக் கருப்புப் பணத்தையும் மீட்பதற்கு ஒரே ஒரு நாள் போதும். அவர்களது நோக்கம் கருப்புப் பண ஒழிப்பாக இருந்தால், இதைத்தான் செய்வார்கள். நாட்டில் உள்ள பெரும்பகுதி மக்களுடைய பொருளாதாரத்தை நிறுவனங்கள் சார்ந்த வகையில் மாற்றி விடுவதுதான் அவர்களது நோக்கம்.

நண்பர்களே, இந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றி பெற்றால் நமது சந்ததியினரின் வாழ்க்கை அடிமைகளின் கூடத்தில்தான் அமையும். இனி உங்களால் நிம்மதியாக நிலம் வாங்க முடியாது, நகை வாங்க முடியாது.

வருமான வரியைப் பிடித்துக்கொண்டுதான் ஊதியம் தருகிறார்கள். உற்பத்தி, விற்பனை, சேவை வரிகளைப் பிடித்துக்கொண்டுதான் பொருட்களை அனுமதிக்கிறார்கள். ஒரு பைசா செலவிட்டாலும் அதில் பாதிக்கும் மேல் மறைமுக, நேர்முக வரி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். பொது இடங்களில் மூத்திரம் போனால் கூட வரி செலுத்திக்கொண்டுதானிருக்கிறோம்.

தண்ணீருக்கு வரி, சாலைகளில் ஒளிரும் விளக்குகளுக்கு வரி, நெடுஞ்சாலைப் பயணத்திற்கு வரி, சொத்துகளுக்கு வரி, வாகனங்களுக்கு வரி, உணவில் வரி, செல்பேசிக் கட்டணங்களில் வரி, வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.

இவ்வளவு பணமும் எங்கே போகிறதென்றால், பெறுநிறுவனங்களுக்கு மானியங்களாகப் போகிறது. பல இலட்சம் கோடிகளை இந்திய அரசு, நிறுவனங்களுக்கான மானியமாக அளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இங்கே என்ன நிலைமை என்றால், ‘அரசியல்வாதிகளுடனும் அரசாங்கத்துடன் பங்குபோட்டுக் கொள்ளையடித்தால் அது வெள்ளைப் பணம். சொந்தமாகச் சம்பாதித்துச் சேர்த்தால் கருப்புப் பணம்’. இப்போது, மேற்படி வெள்ளைப் பணக்காரர்கள் சங்கடமே இல்லாமல் சிரிக்கிறார்கள். உழைத்துக் களைத்த கூட்டம் வரிசையில் நின்றுகொண்டு அவமானப்படுகிறது.

‘என்னை எரித்தாலும் கவலைப்பட மாட்டேன்’ என்று ஒருவர் அழுகிறார். ஏற்கெனவே உங்கள் நடவடிக்கைகளால் எரிந்துபோனவர்களும், தூக்கில் தொங்கியவர்களும், நஞ்சு குடித்தவர்களும் உடலற்ற பேய்களாக அலைகிறார்கள். இதோ இந்த மாபெரும் சமூகம் கையில் பணமில்லாமல், உடல் இருந்தும் பேய்போல திரிகிறது.

நீங்கள் லேசாகக் கண் கலங்கினால் கூட, அது சர்வதேசச் செய்தி. எங்களைப் போன்ற எளியோர் கதறி அழுதாலும், துடைத்து விடகூட ஆளற்ற அனாதைப் புலம்பல். உங்களை எவர் எரிக்கப் போகிறார்கள்? இந்தச் சமூகம்தான் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக்கொண்டதே!

இந்த நாடகங்களைக் கண்டு கண்கலங்கினால், நம் பிள்ளைகளின் ஒருவேளை உணவையும் தனியார் வங்கிகள் பிச்சைபோடும் நிலைமை வரும்.

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால், ஏற்கெனவே இருக்கும் பொருளாதாரத் துறைகளைக் களத்தில் இறக்கட்டும். அவர்களுக்கு நாமும் துணை நிற்கலாம்.

இப்போதைய நடவடிக்கைகள் நமக்கு எதிரானவை.

இறுதியாக, நம் சமூகத்தவரிடம் நான் முன்வைக்க விரும்பும் கருத்து இதுதான். ’பணம் இல்லாப் பொருளாதாரம்’ என்ற சதிகாரச் செயல்திட்டத்தை நிராகரிக்கத் தவறினால், நமது எதிர்காலம் மீளவியலாத நரகமாக மாறிப்போகும்.

இணைப்புக் கேலிச் சித்திரம்: Bala G

No comments:

Post a Comment