Saturday, April 1, 2017

பத்தினிப் பெண்கள்:

பத்தினிப் பெண்கள்:

முதலிரவில்,
என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே
நொறுங்கிப்போனது
உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும்.

ஒவ்வொரு நாள் காலையிலும்,
தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில்,
பொய்த்துக் கொண்டிருக்கிறது
மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும்.

புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும்,
உன் முகம் அடையும் பிரகாசத்தை
நம் வீட்டு படுக்கையறையில் கூட
இதுவரை கண்டதில்லை.

உப்புப் போட மறந்ததையும்,
சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும்,
தாண்டி
என்னிடம் பேச
விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை.

‘அவரு’, ‘என் வீட்டுக்காரர்’
உன் உதடுகள்
உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு
என் பெயர்
கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு.

“ம்ம்ம்…….. வந்து
அடுத்த வாரம் வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா”
தயங்கி தயங்கி
கேட்கும் ஒவ்வொரு முறையும்
உன் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகிறேன்.

“வாங்க… உட்காருங்க… காஃபி சாப்பிடுங்க…”
இயந்திரத் தனமாய்
இம்மூன்றைத் தவிர வேறெதையும்
என் நண்பர்களிடத்தில் பேசியதாய்,
எனக்கு நினைவில்லை.

தோழியென்றோ, தோழனென்றோ,
ஒருவருமே இல்லாமல்
உன்னுடைய ஒட்டு மொத்த உலகமே
கணவனும், புகுந்த வீடும் மட்டுமே
என்பதில் நீ வேண்டுமானால்,
பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

என் தந்தையின் எதிரே
அமர்ந்து பேச மறுக்கும்
ஒவ்வொறு முறையும் நினைவுறுத்துகிறாய்
உன் தந்தையின் முன்பு மட்டும்
நீ கால் மீது கால் போட்டமர்ந்து
பேசுவதை.

வழி வழியாய் வந்ததையே
பார்த்தோ…
கேட்டோ…
பழகியோ…
நீயும்
‘வத்தக் குழம்புக்குள்’
உன் உலகை
தேடிக் கொண்டிருக்கிறாய்.

போர்த்திக் கொண்டு,
தூணின் பின் நின்று,
நிலம் பார்த்து
பதில் சொல்லும் பழக்கம்
நம் பாட்டிகளோடு
போகட்டும்.

வந்து விடு.
கற்புக்கரசிகளும், பத்தினிப் பெண்களும்
காவியங்களோடு போகட்டும்.
சரி, தவறுகள் செய்யும்
சாதாரண மனுஷியாய்,
உன் வட்டத்தைத் தாண்டி
வெளியே வந்து விடு.
.
-எங்கோ, யாரோ...

No comments:

Post a Comment