Saturday, April 1, 2017

இந்த யோகா விவகாரம் குறித்து எனக்கு மனமுறுக்கம் ஏதுமில்லை

இந்த யோகா விவகாரம் குறித்து எனக்கு மனமுறுக்கம் ஏதுமில்லை. நான் முன்பு எங்கேயோ படித்த அளவில் யோகா கலையைச் சித்தர்கள் மருத்துவம் சார்ந்து கண்டுபிடித்தது என்றே நம்புகிறேன்.

சித்தர்கள் என்றாலே ந்மக்குக் கடவுள் மறுப்புக் கொள்கை ஞாபகம் வந்தாக வேண்டும். உடலை சில பயிற்சிகளின் மூலம் உறுதி செய்தாலும், மூச்சுப் பயிற்சியை விடாது செய்து வந்தாலும் உடல் நலனைப் பேணலாம் என்பது அவர்கள் கட்சி. அதாவது இன்னும் தெளிவாகச் சொன்னால் நீ கடவுளை வணங்கி உடல்நலம் தேட வேண்டாம்; உன் பயிற்சியினால் அந்த நலனை அடையலாம் என்றே அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.

இதைப் படித்ததில் நூலின் பெயரை ஞாபகம் செய்யாமல் போனது என் பிசகு. அதைக் குறித்து வைத்திருந்தால் இன்று இன்னுமொரு நல்ல பதிவைக் கொடுத்திருக்கலாம்.

இப்படியான கடவுள் மறுப்புக் கலையை இந்திய ஃபாசிஸ்டுகள் த்ங்களுக்கேயுரிய சூரிய வணக்க அம்சங்களோடு கைப்பற்றிக் கொண்டார்கள் என்று நான் கருதுகிறேன்; அப்போதுதானே இதைச் செல்லுபடியாக்க முடியும்? எனினும் இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் ஒரு கலை என்பதால் இந்திய ஃபாசிஸ்டுகள் தங்கள் சரக்காக நளினமான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுதான் உண்மை என்று நான் எண்ணுகிறேன்.

தங்களின் இயக்க வளர்ச்சிக்கும் பயன்படுத்துகிறார்கள் என்று நாம் நம்பலாம். இந்தப் புரிதல் இருக்குமாயின் முஸ்லிம்களும் இன்ன பிற சமயத்தவரும் யோகாவைப் பயின்று தங்களுக்கும் பலன் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு ஃபாசிஸ்ட் ஆப்பிள் பழம் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டால், நாம் ஆப்பிள் பழத்தை நிராகரிப்பதில்லைதானே! அப்படியாக இதையும் கருதிக் கொள்வது நல்லது.

ஆனால் ஜூன் 21 ஒரு கொண்டாட்டமாகவே படுகிறது. ஏனெனில் 199 நாடுகளுக்கும் சென்று யோகா நிகழ்வை ஒருங்கிணைக்கக்கூடிய அளவில் யோகா ஆசிரியர்கள் இங்கே ஸ்டாக் இல்லை.

வாஸ்து சாஸ்திரம் என்று ஆளாளுக்கு ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு ஜெயலலிதாவையே ஏமாற்றியவர்களுக்கு இது எம்மாத்திரம்? எனவே ஆர்.எஸ்.எஸ். வணிகம் சிறக்கக்கூடும். போலி யோகா நிபுணர்கள் பாசிஸ முகாமிலிருந்து வருவார்கள்; இதைத் தடுப்பது நல்லது.

நிற்க, முக்கியமான கேள்வி, யோகா உடல்நலத்துக்கு ஏற்றதெனில் மனவளத்துக்கும் ஏற்றதுதானா?

குஜராத் பயங்கரவாத நிகழ்வுகளும் கத்தி, கடப்பாறையோடும் குண்டுகளோடும் பாபர் மசூதியைத் தகர்த்ததும் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழித்து சிசுவை வெட்டிச் சிதைத்ததும் யோகாவின் பாடம் அல்லவே!!! நேற்று முன்தினம் யோகா செய்த ஃபாசிஸ்டுகள் ( பொதுமக்களை அல்ல ) பெற்ற பலன்கள் என்னவென அறிய விரும்பலாமா நாம்?

-களந்தை பீர் முகம்மது

No comments:

Post a Comment