Saturday, April 1, 2017

அயம் நாட் ய டமிலியன் பிரதர்:

அயம் நாட் ய டமிலியன் பிரதர்:

தமிழர்கள் யார் என்பதற்கு யார் யாரோ வகை வகையாய் வியாக்கியனம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். நாழ் தமிழர் கட்சியின் சீமான் தனது சமீபத்தியப் பேட்டியில் 'பெயரோடு தமிழ் என்பதை இணைத்துக் கொண்டால் யாரும் தமிழராகி விடலாம்' என்ற அதிரடிச் சலுகையை அறிவித்தார். இந்த தமிழின துரோகி பட்டத்திலிருந்து தப்பிக்க ' தமிழ் லியோ' என்று மாற்றிக்கொள்ளலாமா எனக் கூட யோசனையாக இருந்தது.
.
கடைசி வரை நான் தமிழனாகவே முடியாதோ என்ற ஏக்கத்தையும் பயத்தையும் இன்று காலை ஜுனியர் விகடனில் படித்த பேட்டி ஒன்று உண்டாக்கிவிட்டது. இந்து முன்னனியைச் சேர்ந்த மூகாம்பிகை மணி என்பவர் தனது பேட்டியில் தமிழர்கள் யார் என்பதற்கு புதிய வரையறையைக் கொடுத்து எனக்கு தலைக் கிறுக்கு ஏற்பட வைத்துவிட்டார் என்பதை உங்கள் முன் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன்.
.
1) பசுவை தெய்வமாக வழிபடுபவர்கள்,
2) கழுத்தில் தாலி அணிபவர்கள்,
3) ஒருவருக்கு ஒருத்தி என வாழக் கூடியவர்கள்,
4) தினமும் குளிப்பவர்கள்

என இவர்கள் மட்டும் தான் தமிழர்களாக இருக்க முடியும். அப்படி பார்த்தால் இந்துக்கள் மட்டுமே தமிழர்களாக இருக்க முடியும் ' என்று இது மாதிரி அது மாதிரி இல்லாமல் புதுமாதிரியான விளக்கத்தை தந்திருக்கிறது இந்து முன்னனி.
.
சரி, அவர்கள் சொல்வதற்கு நான் எந்த வகையிலெல்லாம் ஒத்துப் போகிறேன் அல்லது ஒத்துப் போக முடியுமென கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். முதலாவதாக வருவது , பசுவை தெய்வமாக வழிபடுவது. நான் அதிகம் படித்தவனல்ல. ஆனாலும் கூட சென்ற வருடம் ஆறாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடமெடுக்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. திராவிட, ஆரிய நாகரிகங்களை வேறுபடுத்தும் அட்டவணையொன்றில் திராவிடர்கள் காளையை வழிபட்டவர்கள், ஆரியர்கள் பசுவை வழிபட்டவர்கள் என வரலாற்றாராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். திராவிடர்களின் முக்கியத் தொழில் வேளாண்மையென்பதையும் ஆரியர்களின் முக்கியத் தொழில் கால்நடை மேய்த்தல் என்பதும் தெரியவருகிறது. அப்படியிருக்க அவரவர்கள் தங்கள் தொழிலுக்கு உதவக் கூடிய காளை மற்றும் பசுவை வழிபட்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
.
ஆனால் இன்று தமிழ், தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம் என்றெல்லாம் வாய்கிழிய கூவுபவர்கள் ஆரிய பழக்கவழக்கத்தினை, அவர்கள் பண்பாட்டை , கலாச்சாரத்தை தமிழர்களின் பொது கலாச்சாரமாக திணிக்க முனைவதையும் இதன் வழி ஆரியர்கள் மட்டுமே தமிழர்கள் என்பதையும் அவர்கள் நிறுவ முனைகிறார்கள்.
.
ஆரியம், திராவிடம் என்பதெல்லாம் சும்மா கப்சா என்பதாகக் கூட சிலர் வாதாடலாம். அதை விட முக்கியம் நான் ஒரு மாட்டுக்கறி பிரியன். கடையிலிருந்து வாங்கி வரும் கறியில் அது காளை மாடா, பசு மாடா என்பதெல்லாம் ஆராய எனக்கு நேரமில்லை. ஒரு காலத்தில் நாட்டுக்கோழி என்றால் எனக்கு மிகவும் பிரியம். கறிக்கோழி மயமாகிவிட்ட பின் கோழிக்கறியை தியாகம் செய்தாயிற்று.
.
எங்கள் வீட்டிலேயே இரண்டு முறை பன்றி வளர்த்திருக்கிறார்கள். ஒரு செல்லப் பிராணி போல அதுவும் எங்களோடு வாழ்ந்தாலும் அக்கம்பக்கத்து வீட்டு தோட்டங்களில் பள்ளம் தோண்டி செய்த அட்டகாசங்களால் வந்த சண்டைகளை சமாளிக்க முடியாமல் அதன்பின் பன்றி வளர்ப்பதுமில்லை. எங்கே பன்றியிறைச்சி கிடைக்குமென தேடி அலையவும் முடிவதில்லை.
.
ஆட்டுக் கறி... அதன் விலையெல்லாம் ஒரு நாளும் என் பட்ஜெட்டுக்குள் இருந்ததேயில்லை. எங்காவது நிகழ்ச்சியில் புண்ணியவான்கள் பார்த்து பரிமாறினால் தான் உண்டு. எனக்கிருக்கிற ஒரே வாய்ப்பு மாட்டுக் கறி என்பதாலோ என்னவோ அதன் மீது அலாதிப்பிரியம் எனக்கு.
.
செந்தமிழன், பச்சைttத் தமிழன், புரட்சி தமிழன் என்றெல்லாம் பட்டம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்த தமிழின துரோகி பட்டத்திலிருந்தாவது தப்பிக்கலாமே என என்னை தமிழனாக 'மாற்றிவிட' எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் மாட்டுக்கறியா, தமிழனா என்று பார்த்தால் , இந்த பாழாப்போன வயிறு மாட்டுக்கறி பக்கம்தான் மனதை சாய்க்கிறது. என்ன செய்ய?
.
அடுத்த பாயிண்ட்... தொடரும்...!
-
Leo Joseph D

No comments:

Post a Comment